அந்த எமிரேட்ஸ் விமானத்திலிருந்து துபாய் விமான நிலையத்தில் இறங்கியபோது சில்லென்று காற்று முகத்தில் முத்தமிட்டு கடந்து சென்றபோது அவனுக்கு உற்சாகம் மேலும் பல மடங்கு விரிந்தது. வந்தது வேலை நிமித்தமாக என்ற போதும், மனதில் அவனுக்கு பிடித்த சந்திரனை பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பு இந்த பயணத்தை சிலிர்ப்பாக்கியது. சந்திரன் அவனுடைய முன்னாள் சக ஊழியன்... ஆனால் அதனால் வந்த comfort-ஐயும் மீறி ஒரு காரணம் சொல்லமுடியாத பாசம் அவனுக்கு சந்திரன் மீது. பின்பு வேலை மாறி மீண்டும் இந்தியாவுக்கு போய்விட்ட போதும், சந்திரன் மீது இருந்த அன்பு காலத்தால் குறையவில்லை. இப்போது ஒரு ப்ராஜெக்டுக்காக மீண்டும் துபாய் போகவேண்டும் என்றதும், மனம் எதையும் யோசிக்காமல் சந்திரனை நினைத்து குதூகலித்தது. இந்த பயணத்தில் கொஞ்ச நாட்களாக தொடர்பில் இல்லாத சந்திரனை மீண்டும் நட்பு வளையத்தில் சேர்ந்துக்கொள்ள வேண்டும் என்று மனம் துள்ளியது.
கொஞ்ச நாட்களாக ஏன் சந்திரன் தன்னை தொடர்பு கொள்ளவில்லை, அதுவும் தான் வரப்போவதாக அனுப்பிய ஈமெயிலுக்கு பதிலே இல்லையே என்று அவனுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. வேலைப் பளுவாக இருக்குமோ? அல்லது தன்னை தவிர்க்கிறாரோ? எதுவாக இருந்தால் என்ன... எனக்கு சந்திரன் மீது உள்ள அன்பு குறையவில்லை, குறையாது... நிச்சயம் என் அன்பு சந்திரனை மீட்டுத்தரும் என்று திடமாக நம்பினான்.
வேலைக்காக வந்த இடத்தில் எல்லாம் செட்டில் ஆக, சந்திரனை அழைப்பதில் அவனுக்கு தயக்கம் குறையவில்லை. ”ஒருவேளை சந்திரன் என்னை வேண்டும் என்றே தவிர்க்கிறாரோ.. சரி அவரை ஏன் தொந்தரவு செய்யவேண்டும், அவர் நிம்மதியாக இருக்கட்டும்” என்று எண்ணிக்கொண்டு தன் வேலையில் ஈடுபடலானான். அதே சமயம் தன்னுடைய மற்ற பழைய சகாக்களுக்கு அழைத்து தான் வந்திருப்பதை தெரிவித்தான். மனதின் ஓரத்தில் சந்திரனை கூப்பிடவேண்டும் என்கிற ஆர்வத்துக்கு கஷ்டப்பட்டு அணைகட்டிக்கொண்டான்.
ஒரு வெள்ளிக்கிழமை... நல்ல உறக்கத்தில் இருந்தபோது தொலைபேசி அடித்தது. அரை தூக்கத்தில் போனை எடுத்து எண்ணை பார்த்தவனுக்கு ஆயிரமாயிரம் கிலோவாட்ஸ் கணக்கில் இன்ப அதிர்ச்சி.... அது சந்திரனின் நம்பர். பொதுவான நண்பர்களிடம் இருந்து நம்பர் வாங்கியிருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.
“சௌக்கியமா?” என்று எதிர்பக்கம் கேட்க... அவனுக்கு சந்தோஷம் தொண்டையை அடைத்து கண்ணீரை திறந்துவிட்டது.
“ம்ம்... நல்லா இருக்கேன்... நீங்க....?” இதற்கு மேல் வார்த்தைகள் சரளமாக வரவில்லை.
“வந்து ஒரு ஃபோன் கூட பண்ணலை?”
“நான் வர்றேன், உங்களுக்கு எதுனாச்சும் வாங்கிட்டு வரனுமான்னு கேட்டு அனுப்பின மெயிலுக்கு உங்க கிட்ட இருந்து பதிலே வரலை... சரி உங்களை தொந்தரவு பண்ண வேண்டாமேன்னு விட்டுட்டேன்”
“எனக்கு இருக்குற பிஸியிலே உன்னோட மெயிலுக்கு பதில் போட நேரமில்லை. யோசித்து எழுதனும் இல்லை... என்னோட நிலமையை கொஞ்சம் யோசிச்சு பாரு”
“இல்லை... ஒன்னும் வேணாம்னு ஒரு வரியில கூட பதில் போட்டு இருக்கலாமே.... அதுக்கு அவ்வளவு சமயம் எடுக்காதே... எது எப்படியோ.... நீங்க கூப்பிட்டது எனக்கு உண்மையிலேயே சந்தோஷம். எங்கே இருக்கீங்க... உங்களை எப்ப பாக்குறது?” அந்த ஒரே கணத்தில் எல்லா வருத்தங்களும் மறக்கப்பட்டு மன்னிக்கப்பட்டது.
“நான் இப்போ ஒரு வேலை விஷயமா இந்தியா போயிட்டு இருக்கேன்... வர எப்படியும் 10 நாளாவது ஆகும்.... வந்து கூப்பிடுறேன்”
பரஸ்பரம் ஃபோன் வைக்கப்பட்டது. அவன் தனக்கு றெக்கை முளைத்தது போல மிதந்தான். எப்போது 10 நாட்கள் முடியும் என்று ஆர்வமாக காத்திருந்தான். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் இன்பமான வேதனையாக இருந்தது. வேலை சூடு பிடிக்க தொடங்க அவனுக்கு மற்ற விஷயங்கள் குறித்து யோசிக்க சமயம் கிடைக்கவில்லை. இருப்பினும் சந்திரனின் நினைப்பு அவ்வப்போது எட்டிப்பார்க்கும். கடிகாரத்தை பார்த்துக்கொள்வான்... இன்னும் 4 நாட்கள் இருக்கின்றன... 3 நாட்கள்.... 2 நாட்கள்.... நாளை.... இன்று வந்திருப்பார்..... ”சரி! வந்தும் வராததுமாக அவரை தொந்தரவு செய்யனுமா என்ன? நாளைக்கு இரவு அவர் ஓய்வாகட்டும் கூப்பிட்டுக்கொள்ளலாம்....” அவனுடைய மூளையின் practical side கட்டளையிட்டது.
நாளை இரவு 9 மணிக்கு மேல் சந்திரனை கூப்பிட்டுக்கொள்ளலாம்... என்று முடிவானவுடன் அவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் யுகமாக கழிந்தது. பல்லை கடித்துக்கொண்டு மணிகளை ஓட்டிய பிறகு இரவு 9:30 மணிக்கு அவன் சந்திரனை அழைக்கிறான்... இதோ மணிச் சத்தம் கேட்கிறது.... சந்திரா!! சீக்கிரம் ஃபோனை எடு... அவன் இதயம் சுருதி மாறி வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மணி முழுதாக அடித்து ஓய்ந்தது. ஃபோன் எடுக்கப்படவில்லை. அவன் துவண்டு போனான். ஒரு வேளை சாப்பிட போயிருப்பார்... இல்லை யாருடனாவது பேசிக்கொண்டு இருப்பார்.... மீண்டும் 10:00 மணிக்கு முயற்சிக்கலாம் என்று தனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டான். அடுத்த முயற்சிக்கும் அதே பதில் தான்.
அடுத்த நாள் அவனுக்கு வேலையில் கவனம் செல்லவே இல்லை. ஒருவேளை நேற்று இரவு தூங்கி இருக்கலாம்... மதியானம் எப்படியும் ஃபோன் கையில் தான் இருக்கும்... இன்று பேசிக்கொள்ளலாம் என்று தனக்கு தானே சமாதானம் செய்துக்கொண்டான். பகலில் வேலை நேரத்தில் சந்திரனை அழைத்து தொந்தரவு செய்ய அவனுக்கு விருப்பமில்லை. எனவே மதிய உணவு வரை ஊசி முனை மீது காத்திருந்தான். சந்திரனை மதியம் அழைத்தபோதும் அதே கதி தான். இப்போது அவனுக்கு தான் தவிர்க்கப்படுகிறோமோ என்று சந்தேகம் தோன்றியது.
கூட இருந்த சக ஊழியரிடம் கேட்டான் “உங்க ஃபோன்ல இருந்து ஒரு ஃபோன் கால் செஞ்சுக்கட்டுமா?”
“தாராளமா... இந்தாங்க...” ஃபோனை கொடுத்தார்.
கைகள் நடுங்குவதை சாமர்த்தியமாக மறைத்தவாரே சந்திரனின் ஃபோன் எண்களை ஒத்தினான். இதோ ரிங் போகிறது.... இதயம் தடக் தடக் என்று அடித்துக்கொண்டது. “ஹலோ!” எதிர்பக்கத்தில் சந்திரனின் குரல் கேட்க, உள்ளுக்குள் பொங்கிய கண்ணீரை அடக்கியவாறே தொலைபேசியை துண்டித்தான். தான் தவிர்க்கப்படுவது உறுதியாகிவிட்டது. ஏமாற்றமும் ஆத்திரமும் சம விகிதத்தில் அலைக்கழிக்க, நல்ல வேலையாக அவனுடைய சுயபுத்தி நிலைமையை தன் கட்டுக்குள் எடுத்தது. தான் தவிர்க்கப்படுவாதாக நினைப்பதை சந்திரனுக்கு தெரிய படுத்தவேண்டும்... அதே சமயத்தில் அனாவசியமாக scene create பண்ணக்கூடாது.... சந்திரனுக்கு தன்னுடைய எண்ணிலிருந்து ஒரு குறுந்தகவல் அனுப்பினான். “கொஞ்ச நேரம் முன்பு என்னுடைய நண்பரின் தொலைபேசியில் இருந்து நான் தான் உங்களை அழைத்தேன். உங்களுக்கு என்னிடம் இருந்து தனிமை தேவைப்படுவதாக உணர்கிறேன். அதை தர கடமை பட்டுள்ளேன்”
மனது கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை ஒத்துக்கொள்ள ஆரம்பித்தது. ”சே! அனாவசியமாக நான் தான் சுயமரியாதை இல்லாமல் அவரிடம் தொங்கி என்னை தாழ்த்திக்கொண்டேன். அவருக்கு என்னோடு பேசுவதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை என்று முன்னமே தெரிந்தபோதும் நான் ஏன் விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன். அவர் நல்லவர் தான்... ஆனால் எனக்கு தான் பொருத்தமில்லை” என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். அதே சமயம் அவனுடைய மூளையின் emotional பக்கம் “அப்படி என்றால் அவர் ஏன் உன் நண்பர்களிடம் இருந்து நம்பர் வாங்கி உன்னை அழைக்கவேண்டும்?” என்று கேள்வி எழுப்பியது. முடிவில் இனி சந்திரனை தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவு செய்துக்கொண்டு கனத்த மனதோடு உறங்கப்போனான்.
காலம் ஓடியது... அவன் தன் வேலையில் மூழ்கிப்போனான்... எனினும் தவறாமல் சந்திரனின் நினைவு அவ்வப்போது வந்து தொல்லை செய்தது. இன்னும் ஓரிரு வாரங்களில் சந்திரன் இன்னும் ஒரு வயது கூடிவிடுவார் என்பது நினைவுக்கு வர, மீண்டும் சந்திரனை கூப்பிடவேண்டும் என்று மனது துடித்தது. ஒரு கட்டத்தில் மூளையின் கட்டுப்பாட்டை மனது மீற ஒரு இரவு மீண்டும் சந்திரனை அழைத்தான். இம்முறை முதல் ரிங்கிலேயே தொலைபேசி இணைக்கப்பட சந்திரனின் குரலை கொஞ்ச நாளைக்கு பிறகு கேட்டான்.
“எப்படி இருக்கீங்க.... சாப்பிட்டாச்சா?” பிரமிப்பு மாறாமல் கேட்டான்.
“இன்னும் இல்லை.... நீ...?”
அதன் பின வந்த உரையாடல் சம்பிரதாயமாக போய்க்கொண்டு இருக்கையில் சந்திரன் சொன்னது “என்னோட நண்பரை கூப்பிடலாம்னு ஃபோனில் நம்பர் டயல் செஞ்சுகிட்டு இருந்தேன்... உன்னோட கால் வந்ததும் எடுத்துட்டேன்”
அவனுக்கு மீண்டும் மனது வலித்தது. “அப்போ இந்த அழைப்பை தவறுதலா எடுத்துட்டேன்னு சொல்றீங்க...” கொஞ்சம் வலியுடன், sarcastic-ஆக கேட்டான். எனினும் அதை அழுத்தாமல் பொத்தாம் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தான். வார்த்தைகளில் கவனமாக பழைய காயத்தை கிளராமல் பேச்சை முடித்தான். ஆச்சரியமாக ” ஒரு வழியாக பேசிவிட்டேன்” என்ற பிரமிப்பு தான் மிஞ்சியது.
நாட்கள் உருண்டோடின.... சினிமா என்றால் கேலண்டரை காட்டியோ அல்லது 2-3 சூரியோதய ஷாட்டுகளை காட்டி ஓட்டியிருக்கலாம். வாழ்க்கை அப்படி அல்லவே. நாளைக்கு சந்திரனின் பிறந்த நாள். சந்திரம் இருப்பது மற்றொரு அமீரகத்தில்.... எனவே நாளைக்கு மதியம் விடுப்பு கேட்டுக்கொண்டு சந்திரனை முன்னறிவிப்பில்லாமல் போய் பார்க்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. பிறந்தநாளுக்கு பார்க்கப் போகும்போது வெறும் கையோடு போவானேன் என்று தோன்ற... அப்பாவி மனது “என்னுடைய சந்திரன்” என்று செல்லம் கொஞ்ச, தனக்கு தெரிந்த வகையில் ஒரு சிறிய பரிசை தன் கையாலேயே செய்து அழகு பார்த்தான்.
சந்திரனுக்கு முதன் முதலில் தான் தான் வாழ்த்து சொல்லவேண்டும் என்ற பேராசையில் இரவு 12 மணி வரைக்கும் வெட்டியாக டி.வி சேனல் மாற்றிக்கொண்டும், கஷ்டப்பட்டு விழித்துக்கொண்டு சந்திரனை தொலைபேசியில் அழைத்தான். வழக்கம் போல பதில் இல்லை. முன்பே பழகிவிட்டதாலோ என்னவோ இம்முறை அவனுக்கு பெரிதாக ஏமாற்றமில்லை. குறுந்தகவல் மூலம் வாழ்த்து சொன்னான். வழக்கமான பதிலாக தான் கவனிக்கவில்லை என்றும், சமயம் கிடைக்கும்போது விரிவாக பதில் போடுவதாகவும் சந்திரனிடம் இருந்து பதில் வந்தது. எனினும் அடுத்த நாள் சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லி அவரை சரிகட்டிவிடலாம் என்று நினைத்துக்கொண்டான்.
அடுத்த நாள் மதியம்... உணவு வேளைக்கு எல்லோரும் கலையப்போகும் நேரம்.... தன்னுடைய மேலாளரை போய் பார்த்தான்.
“ஸார்.. எனக்கு அரை நாள் விடுப்பு வேணும்”
“நீங்க வந்திருக்கிறது எவ்ளோ நெருக்கமான டைம்லைன் தெரியுமா? இதிலே பொறுப்பில்லாமல் இப்படி திடீரென்று லீவு கேக்குறீங்க.... எத்தனை மணிக்கு போகனும்?
2 மணிக்கு துபாயில் பஸ் பிடித்தால் நல்லது... அப்படின்னா இங்கே இருந்து 1 மணிக்கு கிளம்பனும்.
’1 மணிக்கு கிளம்பனும்னு இப்படி 12:30 மணிக்கு வந்து சொல்லுறீங்க” என்ற அவருடைய கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. மனதுக்குள்ளே “என்ன வேணும்னாலும் பேசிக்கோ, ஆனா எனக்கு மதியம் லீவு வேண்டும்” என்ற பிடிவாதமும், மாலை சந்திரனை திடீரென்று பார்த்து வாழ்த்துக்கூற போகிறோம் என்ற நினைப்பும் அவனை செலுத்தியது. அவனுடைய மேலாளர் வேண்டுமென்றே அவனை 3 மணி வரை காத்திருக்க வைத்து அனுப்பினார்.
விட்டால் போதும் என்று அவன் பஸ் ஸ்டாப்புக்கு போனான். ஜூன் மாதத்தில் வெயில் உச்சியை பிளந்தது. எனினும் அவனுக்கு பெரிதாக உறைக்கவில்லை. பஸ் வந்தா போதும் என்று தோன்றியது.
3:30 மணி ஆனது.... ஒரு பஸ்ஸும் தென்படவில்லை. அவனுக்கு தெரியும் அப்படியே தெரியும் சாலையில் 1 கி.மீ நடந்து சென்றால் மற்ற பஸ் ரூட்டில் சென்று சேரும். அதில் வரும் வண்டியில் ஏறிக்கலாம்... அதில் கொஞ்சம் அடிக்கடி பஸ் வரும். ஜூன் மாதத்து உச்சி வெயில் அவனை அசைக்கவில்லை. அந்த மண் சாலையில் எட்டி வைத்து நடக்க ஆரம்பித்தான். என்ன தான் உணர்ச்சி வேகத்தில் கிளம்பினாலும், இயற்கையின் தாக்கத்தை மீற முடியுமா என்ன? கொஞ்ச நேரம் சென்ற பிறகு அவனுக்கு வியர்வை ஆறாக பெருகி அவன் சட்டையை நனைத்தது.
“இதோ! இன்னும் கொஞ்ச நேரம் தான்... அந்த சாலையை பிடித்துவிட்டால் போதும், 10-15 நிமிடத்துக்கு ஒரு பஸ் வரும்... அதில் ஒன்றை பிடித்துவிடலாம்” என்ற நம்பிக்கை உந்தித்தள்ள அவன் கொஞ்சம் வேகமாக நடையை எட்டிப்போட்டான். ஒரு வழியாக அந்த சாலையை அடைந்த போது அவனுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. அங்கே கட்டுமானப்பணி நடப்பதால் அந்த பஸ் ஸ்டாப்பை அகற்றி இருந்தார்கள். அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு இன்னும் 1.5 - 2 கி.மீ நடக்கவேண்டும். நடந்தாக வேண்டும்....
என் சந்திரனுக்காக நான் கஷ்டப்பட்டு நடந்து சென்று வாழ்த்தப்போகிறேன் என்று அந்த ரணகளத்திலும் அவனுக்கு கிளுகிளுப்பு தோன்றியது. நடந்தான்... நடந்துக்கொண்டே இருந்தான்....
ஏற்கனவே வியர்வை ஆறாக சுரந்ததால் உடம்பில் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது அவனுக்கு. மெதுவாக மயக்கம் வர ஆரம்பித்தது. அவன் நடந்தது ஒரு பாலைவனத்து ஹைவே என்பதால் அதில் டாக்ஸிகள் வராது. அடுத்த பஸ் ஸ்டாப் வரை நடந்தே ஆக வேண்டும். உச்சி வெயில் அவனை வாட்டி எடுக்க... அவனுக்கு மெதுவாக மண்டைக்குள் உறைக்க ஆரம்பித்தது.
“கொஞ்ச நேரம் முன்பு என்னுடைய நண்பரின் தொலைபேசியில் இருந்து நான் தான் உங்களை அழைத்தேன். உங்களுக்கு என்னிடம் இருந்து தனிமை தேவைப்படுவதாக உணர்கிறேன். அதை தர கடமை பட்டுள்ளேன்” - தான் அனுப்பிய குறுஞ்செய்தி நினைவுக்கு வந்தது.
“என்னோட நண்பரை கூப்பிடலாம்னு ஃபோனில் நம்பர் டயல் செஞ்சுகிட்டு இருந்தேன்... உன்னோட கால் வந்ததும் எடுத்துட்டேன்” - உள்ளுக்குள் சந்திரனுடைய குரல் எதிரொலித்தது. தான் ரொம்ப அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டோமோ என்று முதன் முறையாக அவனுடைய மனதுக்கு தோன்றியது.
“நீங்க வந்திருக்கிறது எவ்ளோ நெருக்கமான டைம்லைன் தெரியுமா? இதிலே பொறுப்பில்லாமல் இப்படி திடீரென்று லீவு கேக்குறீங்க....” எப்படியும் தன்னுடைய மேலதிகாரியை முறைத்துக்கொண்டாயிற்று.
மனதும் கால்களும் துவள அவனுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது. அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு போகாமல் மயங்கி விழுந்தால் ”என்ன ஆயிற்று” என்று கேட்க கூட நாதியில்லை. கால்கள் ஒத்துழைக்க மறுத்தது. அதுவும் என்ன தான் செய்யும் பாவம்... உடம்பில் சக்தி இருந்தால் தானே.... தன் மீது அவனுக்கு சுயபச்சாதாபம் தோன்றியது. மனது முதன் முறையாக “இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சந்திரனை பார்க்கவேண்டுமா? Does he deserve this?" என்று யதார்த்தமான கேள்வியை கேட்டது.
“No... not at all. என் மீது அன்பு செலுத்தாத ஒருத்தருக்காக நான் ஏன் இப்படி கஷ்டப்படவேண்டும். Do I deserve this?” என்று எதிர்கேள்வி எழுப்பியது.
“இல்லை.... உன் கையாலேயே செய்த பரிசுப்பொருளுடன் கிளம்பிவிட்டாய். எந்த முடிவானாலும், இந்த பரிசையும், வாழ்த்தையும் சந்திரனிடம் சேர்த்துவிட்டு முடிவெடு” மனது கொஞ்சம் இளகித் தடுமாற்றத்துடன் சொன்னது. ஒரு வழியாக மனப்போராட்டத்துடனும், உடல் போராட்டத்துடனும் அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்தான். புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது போல எனக்கு இந்த பஸ் ஸ்டாப்பில் புத்தி கிடைக்க வேண்டும் என்று ஆண்டவன் விதித்து இருக்கிறான் போல என்று தன் முகத்தை துடைத்துக்கொண்டான்.
ஒரு வழியாக பஸ்ஸில் ஏறியதும் தன்னுடைய பழைய சக ஊழியரை அழைத்து தான் இன்னும் 2 மணி நேரங்களில் அங்கே வந்து சேருவதாக கூறினான்.
“நீ வந்தாலும் சந்திரனை பார்க்கமுடியும் என்று தோன்றவில்லை.... எனினும் சந்திரனையே அழைத்து கேட்டுக்கொள்ளேன். இப்போது தான் அவர் கொடுத்த பார்ட்டியில் இருந்து வருகிறோம்”
“சரி... நான் கூப்பிட்டுக்கொள்கிறேன். தகவலுக்கு நன்றி”. உரையாடல் முடிந்த பின்பு யாரையும் அழைக்காமல் போனை பைக்குள்ளே போட்டான். இனி அடுத்த அமீரகம் போவதில்லை என்று மட்டும் உறுதி செய்துக்கொண்டான்.
கொஞ்ச நேரத்தில் செல்ஃபோன் சிணுங்கியது. எடுத்து பார்த்தான்... அவனுடைய மற்றொரு நண்பன்.... “டேய். நீ அடுத்த அமீரகம் போனும்னு சொன்னியே... இப்போ எங்கே இருக்க?”
“இல்லை.... நான் எங்கேயும் போகலை.... லீவு வாங்கிட்டேன்... பஸ்ஸிலேயும் ஏறிட்டேன்.... ஆஃபீஸுக்கு திரும்பி போக மனசில்ல.... பர்-துபாயில் கொஞ்சம் உலாத்திட்டு ராத்திரி ரூமை பார்த்து போகவேண்டியது தான்”
“அப்படியா? எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு... முதல் பத்திரிகை உனக்கு தான்.. பர் துபாயில இறங்கினவுடனே ஃபோன் பண்ணு... நான் வந்து பிக்கப் பண்ணிக்கிரேன்”
“சரி” தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
பர் துபாய் சென்றதும், நண்பனை பார்த்ததும் யாருக்கோ நடப்பது போல தோன்றியது அவனுக்கு, முதல் பத்திரிகையை அந்த நண்பன் நீட்ட, தன் பையிலிருந்த கைவினை பொருளை எடுத்து “உன் கல்யாணத்துக்கு என்னோட கிஃப்ட்” என்று நீட்டினான். நெஞ்சிலும், பையிலும் பாரம் குறைந்தது போல தோன்ற முகம் துடைப்பது போல, கண்ணில் திரண்ட கண்ணீரை நாசூக்காக துடைத்துக்கொண்டான்.
0 comments :
Post a Comment