Bonjour & Welcome

Powered by Blogger.

Translate

Facebook like box

Flickr Images

அகிலனின் சித்திரப்பாவை

Written By Mahes on Tuesday, October 7, 2008 | 8:10 AM

தமிழுக்கு முதன்முதலில் சாகித்திய அகாடெமி விருதை கூட்டிவந்த பெருமை இந்த நாவலுக்கு உண்டு. இதை நான் முதலில் டி.டி-1ல் தொலைக்காட்சி தொடராக பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். சற்று complex-ஆன கதையெங்கிலும், அந்த இளம் வயதிலேயே எனக்கு மனதை கவர்ந்த படைப்பாக விளங்கியது. இருப்பினும் அதை புத்தகமாக படிக்க ஏன் எனக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்தன என்பது சற்று விந்தையே. கடந்த முறை மதுரைக்கு போனபோது, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே இருந்த ”சர்வோதயா நூல் நிலையத்”தில் இந்த புத்தகத்தை வாங்கினேன். ஆனால் அடுத்தடுத்த வார இறுதிகளில் சேலம், மற்றும் ஆலப்புழைக்கு போனபோதே இதை படித்து முடிக்க முடிந்தது. இதை படிக்கும்போதே ஏன் இதற்கு விருது கொடுக்கப்பட்டது என்று தெளிவாக புரிந்தது. 1960-களின் இறுதியில், சென்னைப்பட்டணம் “மதராஸ்” ஆக மாறி வரும் காலக்கட்டத்தில், அதே நேரத்தில் பழைய தலைமுறையும், கலாச்சாரமும் மாறிவரும் சூழ்நிலையில், மனிதத்தையும், கலாச்சாரத்தையும் மதித்து புதிய பொருளாசை நிறைந்த கலாச்சாரத்துக்கு மாறமுடியாத மனிதர்களின் பின்புலத்தில், கலையும், காதலும் வழிந்தோடிய அற்புதமான கதை இது. இதை படித்து முடிக்கும்போது இதில் வரும் ஆனந்தியும், அண்ணாமலையும், மாணிக்கமும், சுந்தரியும் ரத்தமும் சதையுடனும் நம்மிடையே உலாவிய பாத்திரங்களைபோல ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள்.

முக்கிய அம்சங்கள்:-

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தாலும், மேற்கிலிருந்து வந்த கலாச்சாரத்துக்கு நம் தமிழர்கள் அடிமைப்பட ஆரம்பித்திருக்கும் நேரம் அது. மக்களைவிட பணமும், பொருளும் முக்கியமாக மாறிப்போன சென்னை, நம் கலாச்சாரத்தை மறைத்து சினிமாவில் உடலை காட்டி மக்களின் மூளையை மழுங்கடித்து காசு பார்க்க சில தனிமனிதர்களின் பேராசை, கிராமங்களில் இருந்து நகரத்துக்கு புலம்பெயர்ந்து ஒண்டுக் குடித்தனத்திலும், சிமெண்ட் காடுகளிலுமே வாழ்வதை கவர்ச்சியாக கருதிய தமிழர்கள்... என ’60களின் தடுமாற்றத்தை அப்பட்டமாக காட்டியிருக்கும் அகிலனின் சமூக பிரக்ஞையை பாராட்டாமல் இருக்க முடியாது. பல இடங்களில் அதை அவர் வெளிப்படுத்த தவறவில்லை. உதாரணமாக அண்ணாமலையை தன் கிராமத்துக்கு படமெழுத அனுப்பும் சரவணன் “அன்று நான் பார்த்த கிராமம் இதுவல்ல.. இன்னும் 5-10 வருடத்தில் இந்த கிராமம் முற்றிலுமாக தன்னை இழந்திருக்கும், என்வே உங்களால் முடிந்தவரை கிராமத்தை படமாக பதிவு செய்து வாருங்கள்” என்று சொல்லி அனுப்புகிறார்.

மற்றொரு இடத்தில் கதிரேசன் தன்னை போல மனமொத்த நண்பர்களுடன் சேர்ந்து, தன் கைக்காசை போட்டு ஒரு கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்கிறார். அதில் அண்ணாமலை மூலம் எழுதப்பெற்ற அற்புதமான ஓவியங்களை மலிவு விலை பிரதிகளாகவும், அட்டை படங்களாகவும் மக்களிடத்தில் சேர்க்கிறார். இதை கவனித்த ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் “இப்படி அற்புதமான ஓவியங்களை மலிவு விலை பிரதிகளாக விநியோகிப்பதன் மூலம் அவற்றின் மதிப்பை குறைக்கிறீர்களே” என்று ஆதங்கப்படுகிறார். அதற்கு கதிரேசன் “இப்படிப்பட்ட அற்புதமான கலைகள் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று இருப்பதனால் தான் ஆபாசமான சினிமாவே கலை என்று எங்கள் தமிழ் மக்கள் நம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். செல்லுலாயிட்டில் இந்த போலிகளை ஆதரிக்கும் இந்த இளைஞர்கள் நாளைக்கு இந்த நடிகர்களுக்கு கோவில் கட்டி ஆராதிக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. எனவே தான் நாங்கள் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று இந்த கலையை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்று உண்மையான கலை என்றால் என்ன என்று காண்பிக்க முற்படுகிறோம்” என்று சொல்கிறார். 1968-ல் இதை எழுதிய அகிலன் அடுத்த 25-30 வருடங்களில் நம் தமிழ் மக்கள் கவர்ச்சி நடிகைகளுக்கு (குஷ்பு, நக்மா, நமீதா) உண்மையிலேயே கோவில் கட்டுவார்கள் என்றும், திரையில் காமக்களியாட்டம் புரிந்த நடிகர்கள் எல்லாம் வெள்ளைவேட்டி கட்டிக்கொண்டு நாற்காலி கனவில் மிதப்பார்கள் என்றோ அதை முட்டாள் ரசிகர்கள் வரவேற்ப்பார்கள் என்றோ எதிர்பார்த்து இருக்கமாட்டார்.

மற்றும் சுந்தரியின் சாவின் போது கதிரேசன் இவ்வாறு சொல்கிறார் “மாறி வரும் சமூகத்தின் உளுத்துப்போன சின்னம் இந்த சுந்தரி. காசே பிரதானம் என்ற சமூகத்தால் சூழப்பட்டிருக்கும் இவளுடைய முடிவுக்கு காரணம். வாழ்க்கையின் உண்மை பொருளை பெரியவர்களே தேடாதபோது இவள் போன்ற பிள்ளைகளுக்கு எங்கே கிடைக்கும். ஐம்புலன்களையும் அழுக்கு படியாமல் பார்த்துக்கொண்டாலே போதும், வாழ்க்கை அழகாகிவிடும். ஒழுக்கத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு காசு பணத்தில் முன்னேறுவதில் நாம் குறியாகிவிடுகின்றோம்”. இவ்வாறு அகிலன் மாறிவிட்ட தலைமுறையையும், அமைதியையும் ஒழுக்கத்தையும் தொலைத்துவிட்டு காட்டாறாய் போய்க்கொண்டிருக்கும் சமூகத்தை பற்றி கவலைபட்டிருக்கிறார்.

கதாபாத்திரங்கள்:-

பணத்துக்காக எதுவும் செய்ய துணியும் மாணிக்கம், பொருளீட்டுவதில் குறியாயிருக்கும் தண்டபானி, மேஸ்த்திரி, காசும் உல்லாசமுமே வாழ்க்கை என்று கருதும் சுந்தரி ஒரு பக்கம், கலையார்வத்துக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் அண்ணாமலை, பத்திரிகை ஆசிரியர் சரவணன், ”வாழ்க்கையை அழகாக்கு, முடியவில்லை என்றால் அசிங்கப்படுத்தாமலாவது இரு” என்று ரசனையாக வாழும் கதிரேசன், அவர் மகள் ஆனந்தி, அவள் தோழி சாரதா என இரு துருவங்களாக கோட்பாடுடைய மக்கள் இந்த நாவலில் பரவிக்கிடக்கின்றனர். இதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களுமே தெளிவாக செதுக்கப்பட்டுள்ளன.

கதை:-

கிராமத்திலிருந்து சென்னைப்பட்டிணம் வந்து மெதுவாக காலூன்றி வரும் மேஸ்த்திரிக்கு ஒரு மகன் அண்ணாமலை. அவனை என்ஜினியராக்க துடிக்கிறார் மேஸ்த்திரி. ஆனால் அண்ணாமலையின் மனம், கவனம் எல்லாமே வரைவதிலும், கலையிலுமே இருக்கின்றன. மேஸ்த்திரியிடம் சித்தாளாக இருந்து வந்த செல்லம்மாவின் மகனான மாணிக்கம் மேஸ்த்திரியின் மூத்தப்பிள்ளை போல கொண்டாடப்படுகிறான். விதி அண்ணாமலையை கதிரேசனுக்கும், ஆனந்திக்கும் அறிமுகம் செய்கிறது. சில நிகழ்வுகளுக்கு பின்பு மேஸ்த்திரியும், கதிரேசனும் நெருங்கிப்பழகுகின்றனர். அண்ணாமலையும் ஆனந்தியும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டபோதும் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ளாததால் மாணிக்கம் இடையில் புகுந்து அவர்களை லாவகமாக பிரித்துவிடுகிறான். ஆனந்தி மாணிக்கத்தையும், அண்ணாமலை சுந்தரியையும் மணமுடிக்கின்றனர். ஒரு முறை வியாபாரத்தில் நிகழ்ந்த தவறால் மாணிக்கமும், மேஸ்த்திரியும் நஷ்டப்பட, அவமானத்தில் மேஸ்த்திரி உயிர் துறக்கிறார். மாணிக்கம் தன் சுயரூபத்தை காட்டி, கடைசியில் அண்ணாமலையின் வீட்டை ஜப்திக்கு கொண்டு வருகிறான். மாணிக்கத்தின் சூழ்ச்சியை அறிந்த ஆனந்திக்கோ ஒன்று செய்யமுடியாத நிலைமை. முடிவு? யாரும் எதிர்பாராதது.

கதையில் போதுமான அளவுக்கு சோகங்களும், சூழ்ச்சிகளும் உண்டு என்ற போதிலும், நம்மை ஈர்ப்பது கதிரேசனின் “வாழ்க்கையை அழகாக்கு, முடியவில்லை என்றால் அசிங்கப்படுத்தாமலாவது இரு” என்ற கொள்கையும், அதை கடைபிடித்து தன் வாழ்வை அழகாக வாழமுயற்சிக்கும் அண்ணாமலையின் நடவடிக்கைகளும். தான் வாழ்க்கையில் ஆனந்தி என்ற விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை இழந்திருக்கிறோம் என்று தெரிந்த பின்பும், தனக்கு வாய்த்த மனைவியான சுந்தரியோடு முடிந்தவரை இன்பமாக வாழ முயற்சிப்பதே இதற்கு சான்று. ஒரு சிறு சந்தேகத்தாலும், முட்டாள் தனத்தாலும் தன் வாழ்க்கையை கோட்டைவிடும் ஆனந்தி கடைசியில் எடுக்கும் புரட்சியான முடிவால் தன் முந்தைய தவறுகள் அனைத்தையும் சரி செய்துவிடுகிறாள். சிறிதளவே வந்தாலும் அண்ணாமலையை சரியான வழியில் திசைதிருப்பும் கதிரேசனும், பத்திரிகை ஆசிரியர் சரவணனும் புத்தகத்தை மூடிய பின்பும் நம் மனதில் நிறைவாக வியாபிக்கின்றார்கள்.

விருதுகள் பெற்ற அனைத்து நாவல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு - சரளமான சொல் வளமை, ஒரு இடத்தில் கூட நம்மை புத்தகம் படிக்கிறோம் என்று தோன்றவிடாமல், பக்கங்களை புரட்ட புரட்ட அந்த நிகழ்வுகளை அப்படியே நம் மனத்திரையில் படமாக விரிக்க வைக்கும் திறமை. இந்த சித்திரப்பாவையும் அதற்கு விலக்கல்ல. 1968-ல் பதிப்புக்கு வந்ததென்றாலும், இன்றும் கூட நம்மை பாதிக்கும் இந்த புத்தகம் இலங்கை, மலேஷியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருப்பது வியப்பில்லை.

தொலைக்காட்சி வடிவம்:-

பல முறை புத்தகங்கள் திரைப்படங்களாகவோ அல்லது நாடகங்களாகவோ உருவம் மாறும்போது அதன் இயல்பும், நடையும் கெட்டுப்போவதையும் அல்லது நாவலின் வசீகரம் அப்படியே திரையில் வராததையும் காணலாம். ஆனால் இதுவரை நான் படித்த புத்தகங்களிலேயே நாடகமாகவும் அழகாக வடிவம் பெற்றது இந்த சித்திரப்பாவை மட்டும் தான். Soliloquy எனப்படும் தன்னுள் பேசப்படும் வசனங்கள் மூலம், கலாச்சார மாறுதல்களை சாடும் பாத்திரங்களின் வசனங்கள் திரையில் இடம்பெறவில்லை (முடியாது) என்ற போதும், சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் உணர்ச்சி போராட்டங்களை ரசனை கெடாமல் வடித்து இருந்தார் இயக்குநர். 1988/89ல் டி.டி-1ல் வியாழக்கிழமைகளில் 13 வார தொடராக வந்தது. ’சோழா’ பொன்னுரங்கத்தின் தயாரிப்பில், இன்றைய திரைப்பட இயக்குனர் செல்வா (நான் அவன் இல்லை, ஜேம்ஸ்பாண்டு etc etc) அதை இயக்கியிருந்தார். அந்த sensible film maker செல்வா இன்று எங்கே என்பதற்கு வணிகரீதியாகிவிட்ட திரைப்படங்களே பதில் சொல்லும். ‘சாகித்திய அகாடெமி விருது பெற்ற’ சித்திரப்பாவையை தழுவியது என்ற அடைமொழியுடனேயே ஆரம்பிக்கப்பட்டது.

அண்ணாமலையாக ரவி ராகவேந்தரும், ஆனந்தியாக வைஷ்ணவியும், ஆசிரியர் சரவணனாக நடிகர் சிவக்குமாரும், சாரதாவாக ஃபாத்திமா பாபுவும் (முதல் நாடகம்) நடித்து இருந்தார்கள். குறிப்பிட்ட அத்தனை பேரும் கதாபாத்திரங்களை மீறி முதிர்ந்தவர்கள் என்றபோதும், அது ஒரு near perfect casting. நாவலை முழுமையாக எடுத்து சென்றிருந்த போதிலும், சில மாற்றங்கள் செய்திருந்தார்கள். குறிப்பாக இரண்டாம் பகுதியில் தோட்டக்கார வேலைய்யாவின் மகளுக்கு பதிலாக கட்டிட தொழிலாளி ஒருவரின் மகள் மாணிக்கத்தால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துக்கொள்வது போலவும், இதை அறிந்து ஆனந்தி கையாலாகாமல் அழுவது போலவும் மாற்றியிருந்தார்கள். மாணிக்கத்தை மிகவும் கெட்டவனாக காட்டத்தான் இந்த செருகல். மேலும் கலைப்பள்ளி தலைமை ஆசிரியர், கலை மலர் பத்திரிகை ஆசிரியர் சரவணன் ஆகிய பாத்திரங்களை ஒன்றாக்கி நடிகர் சிவக்குமாரை போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். (சரியாக நினைவில்லை).

ஆனால் க்ளைமேக்ஸில் அவர்கள் செய்திருந்த மாற்றம் உண்மையிலேயே நன்றாக இருந்தது. புத்தகத்தில் மாணிக்கம் ஆனந்தியை பலாத்காரம் செய்ய முயற்சிப்பது போலவும், ஆனந்தி அதை எதிர்த்து போராடுவது போல எழுதியிருந்தார் அகிலன். ஆனால் டிவியில் அதை ஆனந்தி அண்ணாமலைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை கண்டு பொங்கியெழுவதாக மாற்றியிருந்தார் செல்வா. முடிவு சம்மட்டி அடியாக இருந்தது. மாணிக்கத்துக்கு தண்டனை எதுவும் தராமல் முடிக்கப்பட்டு இருந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. எங்கேனும் இதன் DVD கிடைத்தால் வாங்கிவைக்கலாம். A worthy attempt.

பதிப்பாளர்கள்: தாகம், 34, சாரங்கபாணி தெரு, திருமலைப்பிள்ளை குறுக்கு தெரு, தி. நகர், சென்னை - 17
பக்கங்கள்: 536
விலை: ரூ. 200/-

இது www.maheshwaran.com என்ற என்னுடைய வலைதளத்தில் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்று.
SHARE

About Mahes

1 comments :