இம்முறை வைத்தி வீட்டுக்கு போய் வரும்போது 'எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள்' தொகுப்பை எடுத்து வந்தேன். பஸ்ஸில் வரும்போது முதல் 4 சிறுகதைகளை படித்தேன். ஒவ்வொன்றும் நான் புரிந்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளை கொண்டு இருந்தது. அவற்றை படித்தவுடன் அது சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு மனசு தாவியது. நினைவுகள் நல்லதாக இருப்பின் நமக்கு மேலும் புத்துணர்ச்சி கிட்டும். ஆனால் நினைவுகள் வலி கொணடவையாக இருப்பின், it leaves us emotionally dry. பொதுவாக புத்தகங்கள் படிக்கும் அனைவரும் இப்படி emotional travails-க்கு ஆளாகிறார்களா? இல்லை என் போன்ற சிலர் மட்டும் தானா? இந்த சந்தேகம் தோன்றியதும் புத்தகத்தை மூடிவைத்து விட்டேன். நீங்கள் ஒரு திரைப்படமோ / நாவலோ பார்த்தோ / படித்தோ நாம் வாழ்க்கையில் இது போல மாறவேண்டும், இப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் நினைத்திருக்கிறீர்களா?
எனக்கு பலமுறை பல திரைப்படங்களை பார்த்து தோன்றியிருக்கிறது. இந்த சமயத்தில் எனக்கு நடிகர் கமல்ஹாசனின் பேட்டி ஒன்று நினைவுக்கு வருகிறது. அவரிடம் 'நீங்கள் methodical actor / spontaneous actor-ஆ?' என்று கேட்டபோது, கமல்ஹாசனின் 'ஆரம்பத்தில் methodical actor, பின்பு வாழ்க்கை தரும் அனுபவத்தில் spontaneous actor ஆகிவிட்டேன்' என்றார். For those who came late, methodical acting என்பது நடிகர்கள் காட்சிக்கேற்ப தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து, மெல்ல மெல்ல அந்த சூழ்நிலையை உள்வாங்கி டேக்கில் அந்த நிகழ்ச்சியில் react செய்தது போல நடிப்பது. இதில் உள்வாங்கவும், அந்த காட்சியில் இருந்து வெளிவரவும் நிறைய சமயம் எடுக்கும்.
உதாரணமாக நண்பன் / தந்தை இறப்பது போன்ற காட்சியில், தங்களுக்கு நெருக்கமானவர்களின் இறப்பை நினைத்து, அந்த வலியை மீண்டும் புணர்ந்து, மூடுக்கு வந்து கேமிராவின் முன்பு தத்ரூபமாக நடிக்கவேண்டும். கடந்த காலத்துக்கு பயணப்பட்டவர்கள் நிகழ்காலத்துக்கு வர வெகு நேரங்கள், சில சமயங்கள் நாட்கள் / வாரங்கள் கூட ஆகுமாம். மீரா ஜாஸ்மின் தனக்கு தேசிய விருது வாங்கி தந்த 'பாடம் ஒன்று ஒரு விளாபம்' என்ற மலையாள படத்தில் நடித்த 'ஷாகீனா' கதாபாத்திரம் அவருக்கு nervous breakdowns - ஏற்படுத்தியதாம். வீட்டிலும் 'ஷாகினா'வை போலவே நடந்துக்கொண்டாராம். அதற்கு பிறகு தமிழில் 'ஆஞ்சனேயா' படத்தின் செட்டுக்கு போனபோதும் கூட 'ஷாகீனா' மீராவை விடவில்லையாம்.
அதுபோல எனக்கு சில சீரியஸ் எழுத்தாளர்களை படிக்கும்போது, கதையில் ஊன்றிப் போகும்போது அந்த கதாபாத்திரங்களின் வலியை உணரும்போது கிட்டத்தட்ட அதுபோல என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருவதுண்டு. இது எல்லா நாவல்களுக்கும் நடப்பதில்லை, ஆனால் சில நாவல்கள் என்னை வெகுவாக பாதித்து வாரத்துக்கு தூங்கவிடாமல் இம்சை பண்ணுவது உண்டு. இவற்றால் அந்த நாவலை, கதாபாத்திரங்களை அனுபவித்து, நம் வாழ்க்கையின் ஒரு பாகமாக ஊன்றி படிக்க முடிகிறது என்பதே உண்மை.
நாவல்களில் வரும் எந்த விதமான உறவு பிரிவுகளில் நான் சந்தித்த சில நட்பு முறிவுகள் ஏற்படுத்திய நெஞ்சுவலிகள் மீண்டும் லேசாக தட்டி எழுப்பப்படும். காலத்துக்கும் நண்பனாக இருப்பான் என்று கருதிய மோகனசுந்தரமும் / பாலாஜியும், அழகான அந்த நட்புகள் அற்பமான அனாவசியமான சந்தேகத்தில் (for no fault of mine) முறிந்தது இன்றும் கூட கண் முன்னில் வந்து போகிறது. நேசமாக நட்புக்கரம் நீட்டியும், ஏற்க மறுத்த சந்திரமோகன் என் மனதில் ஏற்படுத்திய காயத்தை ஆற்ற மனநல மருத்துவரை நாடவேண்டியதாக இருந்தது. Ofcourse இவை நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும், அந்த வலிகளில் இருந்து நான் மீண்டு வந்துவிட்டாலும் சட்டென ஒரு மின்னல் போல கண்ணடித்துவிட்டு போகும். யார் எழுதும் எந்த விதமான உறவு பிரியும் நாவல்களிலும் நான் இவர்களை தான் பார்க்கிறேன். ஸ்டெல்லா புரூஸின் 'அது ஒரு நிலா காலம்' படித்துவிட்டு நான் கிட்டத்தட்ட 1 வாரம் ராம்ஜியும், சுகந்தாவும் எப்படியெல்லாம் வேதனைபட்டிருப்பார்கள் என்று நெஞ்சு பாரத்தை சுமந்திருக்கிறேன்.
எஸ். ராமகிருஷ்ணனின் சில சிறுகதைகளை படித்தபோது அந்த protagonist-ஆக நானே இருப்பதாக உணர்ந்தேன். இந்த கதைகளை பற்றி பின்பொரு முறை எழுதுகிறேன். நான் சிறு வயதில் இருந்தே இப்படிப் பட்ட ஊடகங்களால் மிகவும் உணர்ச்சிவசப்படுவேன். ஒரு முறை 'வ. உ. சிதம்பரனார் பற்றிய Documentary-ல், அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனபோது சுப்ரமணிய சிவா மட்டுமே தனியாளாக வரவேற்க வந்ததை கேட்டு, அழுதபடியே எனது Drawing Note-இல் அந்த காட்சியை வரைந்தேன். அதை ரொம்ப நாட்களுக்கு என் அப்பா வீட்டுக்கு வந்தவர்களிடம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தார்.
திரைப்படங்களில் மிகவும் என்னை ஒட்டி அமைந்த படம் என்றால் நான் 'பார்த்திபன் கனவு' படத்தை சொல்லுவேன். குறிப்பாக TV குறித்த பார்த்திபனின் கமெண்டுகள், 'பிடித்த வேலைக்கும், கட்டாய வேலைக்கும் சொல்லும் வித்தியாசம், திருமணம் செய்யப்போகும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புக்களும், அவை பொய்த்து போகும் கட்டத்தில் நடிக்க முடியாமலும், இயல்பாக இருக்க முடியாமலும் தவிக்கும் தவிப்புகள் என்று பார்த்திபனின் ஒவ்வொரு அசைவிலும், நினைப்பிலும் என்னை பார்த்தேன். அதனாலோ என்னவோ எனக்கு எப்படியாவது எனது திருமண வாழ்க்கையை பார்த்திபனை போல வெற்றிகரமாக மாற்றிக்காட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நாம் படிப்பதும், பார்ப்பதும் ஏதாவது ஒரு க்ஷணத்தில் நம் வாழ்க்கையை, மனதை தொட்டுப் போகவேண்டும் என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். நம் வாழ்க்கையின் 24 மணி நேரங்களில் விழித்து இருக்கும் 16 மணிநேரத்தில் கணிசமாக 3-4 மணி நேரங்களை இந்த ஊடகங்களில் (படிப்பது, கேட்பது, பார்ப்பது) செலவிடுகிறோம். எனவே அவற்றில் நம்மை தொடக்கூடிய, உணரக்கூடிய, take home என்று சொல்லக்கூடிய ஏற்றுக்கொள்ளகூடிய விஷயங்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதனாலேயே TV-யில் வரும் மெகா சீரியல்கள் / நெடுந்தொடர்களை எதிர்க்கிறேன். அவற்றால் கள்ள உறவுகளும், சூழ்ச்சிகளும், வன்முறைகளும் நம் தினசரி வாழ்க்கையின் பாகம் என்ற மாயையை தோற்றுவிக்கின்றன. அவற்றை எதிர்க்கிறேன்.
சில படைப்புக்கள், சில சமயங்களில் நம்மை மனதளவில் exhuast செய்யலாம் என்ற நிலையிலும் புத்தகத்தையும், திரைப்படங்களையும் என் பொழுதுபோக்கிற்காக நாடுகிறேன். பொழுதுபோக்கிற்காக என்று செய்யப்படும் படிப்பது, சில TV நிகழ்ச்சிகளை பார்ப்பது, நல்ல இசையை கேட்பது என்று ஒவ்வொன்றையும் உணர்வுபூர்வமாக, சீரியஸாகவே செய்கிறேன். படிக்கும் ஒவ்வொரு புத்தகமும், நாவலும், பார்க்கும் ஒவ்வொரு chat show-வின் episode-உம் ஒவ்வொரு அனுபவம். பாலகுமாரனை படிக்கும்போது சில விஷயங்களை இப்படி தான் emotional-ஆக அணுகவேண்டும், சுஜாதாவை படிக்கும்போது இப்படி Practical-ஆக அணுகவேண்டும் என்று பாடம் போல இருக்கும். ஒரே சூழல் என்றபோதிலும் இருவரும் கையாள்வது வித்தியாசமான அனுபவம். அனுபவங்களில் நல்லவை கெட்டவை என்பது இல்லை. வெறும் பாடங்கள் மட்டுமே.
இந்த கட்டுரையின் முடிவில் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி - நீங்களும் படிக்கும் போது உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை reference செய்து கொள்வீர்களா?
பின் குறிப்பு: சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை www.maheshwaran.com என்ற இணையதளத்தில் படிக்கலாம்.
Home
»
ஊடகங்களும் நினைவுகளும்....
»
ஊடகங்களும் நினைவுகளும்....
0 comments :
Post a Comment